< Back
மாநில செய்திகள்
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கு:  சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்  புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேட்டி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேட்டி

தினத்தந்தி
|
20 July 2022 11:13 PM IST

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்தார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்புக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரத்தில் முடிந்தது. இதில் பள்ளி மற்றும் அங்கிருந்த வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய போலீஸ் சூப்பிரண்டாக சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த பகலவன் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும்

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும். என்னுடைய முதல் வேலை பொதுமக்கள் அனைவரும் போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பதாகும்.

ஏற்கனவே மூத்த காவல்துறை அதிகாரிகள் இங்கு முகாமிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்கள். மாவட்ட காவல்துறையும் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்.

கடுமையான நடவடிக்கை

அதே போல் தற்போது இந்த பகுதியில் மாணவி இறந்த சம்பவம் துரதிருஷ்டமானது. அந்த சம்பவம் குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இதில் யார் தவறு செய்தாலும் தண்டிப்பதற்கு சி.பி.சி.ஐ.டி. எல்லா முயற்சிகளும் எடுக்கும். அவர்களுக்கு மாவட்ட காவல்துறை முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.

அதேபோல் போராட்டம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு நடத்திவரும் விசாரணைக்கும் மாவட்ட காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து, அதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

சமூக வலைத்தளங்கள்

இந்த சம்பவத்தில் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். தவறு செய்தவர்கள் உள் மாவட்டம், வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து குற்ற வழக்கில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை் சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். எனவே யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்