கள்ளக்குறிச்சி
சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்க கள்ளக்குறிச்சி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை
|சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வராமல் தடுக்க கள்ளக்குறிச்சி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் Kaniyamur Riotல் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி(வயது 17) மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது தமிழகத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாணவி ஸ்ரீமதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அவ்வாறு மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கும் சமயத்தில் யாரேனும் போராட்டம் நடத்துவதுடன் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட வாய்ப்பு இருக்கக்கூடும் என்பதால் கள்ளக்குறிச்சி நகரில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் தீவிர சோதனை
குறிப்பாக கள்ளக்குறிச்சி நகரில் உள்ள சேலம் மெயின் ரோடு, தியாகதுருகம் சாலை, கச்சேரி சாலை, கச்சிராயப்பாளையம் சாலை மற்றும் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
வெளியூர்களில் இருந்து அரசு, தனியார் பஸ்களில் கள்ளக்குறிச்சி நகருக்கு வந்திறங்கியவர்களை போலீசார் நிறுத்தி எங்கிருந்து வருகிறீர்கள், எங்கே செல்கிறீர்கள் என்ற விவரங்களை கேட்டறிந்து தீவிரமாக விசாரணை செய்த பிறகே அவர்களை செல்ல அனுமதித்தனர்.
அதேபோல் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களையும் போலீசார் நிறுத்தி அவர்களையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே செல்ல அனுமதித்தனர். போலீசாரின் தீவிர வாகன சோதனை மற்றும் கெடுபிடியால் கள்ளக்குறிச்சி நகரம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.