ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து..!
|ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், "சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்து உள்ளார்.