திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா - சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
|திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. 18-ம் தேதி சூரசம்ஹாரம், 19-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 29 சிறப்பு பணி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும்15-ம் தேதி முதல் 19ம் தேதி வரை பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பணி அலுவலர்கள் திருக்கோவிலுக்கு வருகை புரியும்போது, வாக்கி டாக்கியை தவறாமல் கொண்டு வரவும் மற்றும் தங்களுடன் அலுவலக பணியாளர்கள் இருவரை அழைத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பணி அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர் மூலம் பெறப்படும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் ஆகியோர்களுக்கு உரிய பணியினை ஒதுக்கீடு செய்து சுழற்சி முறையில் பணியமர்த்திட திருச்செந்தூர், இணை ஆணையர், செயல் அலுவலரைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.