காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் பெண் ஊழியரிடம் அத்துமீறல்; விசாரணை நடத்த அதிகாரிகள் நியமனம்
|காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் பெண் ஊழியரிடம் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, உண்மை தன்மை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலராக வேதமூர்த்தி உள்ளார். இவர் கோவில் அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புகார் எதுவும் அளிக்காத நிலையில் உண்மை தன்மை கண்டறிய வேண்டும், புண்ணிய ஸ்தலமாக விளங்கும் கோவிலில் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பக்தர்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி நிருபர்களிடம் கூறுகையில்:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர், பெண் ஊழியரிடம் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, உண்மை தன்மை கண்டறிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தும், கோவில் செயல் அலுவலர் மற்றும் பெண் ஊழியரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை முடிவுகள் வந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.