< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் 5,353 பேருக்கு கலெக்டர் கடனுதவி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் 5,353 பேருக்கு கலெக்டர் கடனுதவி

தினத்தந்தி
|
9 Jun 2022 2:01 PM GMT

முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக பயனாளிகளுக்கு கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மத்திய அரசு மற்றும் இந்திய நிதித்துறை, மத்திய ரிசர்வ் வங்கி, மாநில வங்கியாளர்களின் குழுமத்தின் அறிவுரையின்படி, இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் மாவட்டம் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களின் தொடர்பு முகாம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்கவும் வங்கி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலைவாய்ப்பை பெருக்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் வலியுறுத்தினார். இதில் இந்தியன் வங்கியின் காஞ்சீபுரம் மண்டல மேலாளர் ராஜாராமன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலக உதவி பொது மேலாளர் கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்