பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காஞ்சீபுரம் வாலிபர் கழுத்தை அறுத்துக்கொலை
|திருப்பூர் அருகே பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கழுத்தை அறுத்து கொலை செய்த பனியன் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்,
காஞ்சீபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 24). இவர் கடந்த 11-ந்தேதி திருப்பூர் அருகே குன்னத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆகாஷை கொலை செய்தது மயிலாடுதுறை மணல்மேடு பகுதியை சேர்ந்த அஜித் (25), தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜம்புலிபுதூரை சேர்ந்த கார்த்திக் (26) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை பிடித்து கைது செய்தனர்.
இதில் கொலையாளிகளில் ஒருவரான அஜித் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பாலியல் தொல்லை
எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. நான் திருப்பூர் ராதாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனது நிறுவனத்தில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் எனது நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சில பெண் ஊழியர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக எனது கவனத்துக்கு வந்தது. இதனால் அவரை கண்டித்தேன்.
இதனால் கோபம் அடைந்த ஆகாஷ் எனது மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு மயிலாடுதுறை சென்று விட்டார். அதன்பின்னர் அவர் வேலைக்கு வரவில்லை.
வேலைக்கு வருமாறு அவரை பல முறை அழைத்தேன். அதன்பின்னர் ஒரு நாள் அவர் வேலைக்கு வந்தார். அவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
அதன்படி நானும், எனது நிறுவனத்தில் வேலை பார்த்த கார்த்திக்கும் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஆகாஷை அழைத்துக்கொண்டு குன்னத்தூர் பகுதிக்கு சென்றோம்.
கழுத்ைத அறுத்து கொன்றோம்
வழியில் மது வாங்கி கொண்டு அங்குள்ள ஒரு குளத்தில் வைத்து 3 பேரும் மது அருந்தினோம். போதை ஏறியதும், நாங்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் ஆகாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டோம்.இவ்வாறு அஜித் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.