காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா - பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம்
|சேஷ வாகனத்தில் வீதியுலா சென்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் பாதியில் திரும்பியதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று முன்தினம் காலை வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த கருட சேவை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வரதராஜ பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது திடீரென சூறாவளி காற்றுடன் திடீர் மழை பெய்ததால் பெருமாள் வீதியுலா செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மாலை 6 மணியளவில் தொடங்கவேண்டிய வீதியுலா மழை நின்ற பிறகு இரவு 9 மணியளவில் தொடங்கியது. ஏற்கெனவே காலையில் கருடசேவை விழாவில் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சாமி வீதி உலா சென்றதால் அதனை சுமந்து செல்லும் ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் 9 மணிக்கு தொடங்கிய அனுமந்த வாகன வீதியுலா நள்ளிரவு 2 மணிக்கு பிறகே கோவிலை வந்தடைந்தது.
இதை தொடர்ந்து நேற்று காலை பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா தொடங்கியது. போதிய ஓய்வு இடைவெளி இல்லாமல் காலை 6 மணியளவில் சேஷ வாகன வீதியுலா தொடங்கியதால் கீரை மண்டபம் பகுதிவரை சென்று திரும்பலாம் என்று சாமி வீதியுலா வாகனத்தை தூக்க கூடியவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்காத அதிகாரிகள் முறைப்படி சென்று திரும்பவேண்டும் என்று அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். சோர்வு காரணமாக அதிக இடங்களில் சேஷ வானத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர்.
அதிகப்படியான வெயில் காரணமாகவும் கீரை மண்டபத்தை கடந்து மூங்கில் மண்டபம் வரைசாமி தூக்கி வந்த ஊழியர்கள் இதற்கு மேல் தங்களால் சாமி தூக்கி செல்ல இயலாது என்று தெரிவித்து பாதியிலேயே மீண்டும் கோவில் நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் காமராஜர் சாலை, கச்சபேஸ்வரர் கோவில், மண்டகப்படி நடக்கும் இடமான சங்கர மடம் உள்ளிட்ட பகுதிகளில் சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாளை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பிறகு அதற்குரிய காரணத்தை கேட்டு அறிந்த நிலையில் அவர்களுக்கும் ஓய்வு அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டதால் எந்த வித சர்ச்சைகளும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வழக்கம் போல் மீண்டும் மாலை சந்திர பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் உற்சவர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.