காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது
|காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு வைகுண்ட பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தையொட்டி வைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினார்.
பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்து வேத மந்திரங்கள் ஒலிக்க மேளதாளம் முழங்க கோவில் பட்டாச்சாரியார்கள் தங்க கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியை ஏற்றி வைத்து பிரம்மோற்சவத்தை தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நாள் தோறும் காலை, மாலை, என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாக்களாக நாளை (வியாழக்கிழமை) கருட சேவை விழா, 22-ந்தேதி தேரோட்டம், 24-ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது
விழாஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், கோவில் மேலாளர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.