காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
|காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீரானது வெளியேறி வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் கடந்த 2 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் ஆரப்பரித்து செல்கிறது.
வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வது மட்டுமின்றி குடியிருப்புகளில் மழை வெள்ளம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறத்திலுள்ள தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றங்கரையோரங்களில் மழை வெள்ளம் சூழந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக தாயார்குளம் ஆற்றங்கரையோரங்களிலுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தீயணைப்பு மற்றும் போலீஸ்துறை மூலம் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயார்குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள 2 சிறிய தரைப்பாலங்களில் ஒரு பகுதியை வெள்ளம் செல்ல ஏதுவாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் உடைத்தது.
தொடர்ந்து வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, அந்த பகுதியை கடந்து செல்லவோ வேண்டாம் என்றும் அவ்வாறு கடந்து செல்லக்கூடியவர்களை தடுக்கும் பொருட்டு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.