< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு

தினத்தந்தி
|
12 Dec 2022 12:53 PM IST

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சீபுரத்தில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் வேகவதி ஆற்றில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கன மழையினால் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வினாடிக்கு 600 கனஅடி நீரானது வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கையானது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுக்கப்பட்டு அவர்கள் தங்கவைக்க‌ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஏரி, குளங்கள் என பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வேகவதி ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாயார்குளம் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

பொதுமக்கள் மீட்பு

பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீடுகளுக்குள் இருந்துவரும் பொதுமக்களை மீட்டு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெள்ளம் செல்ல தடையாக இருந்துவரும் வகையில் அண்மையில் புதிதாக கட்டப்பட்ட சிறுமேம்பாலத்தை வெள்ளம் செல்ல வசதியாக ஒரு பகுதியை உடைத்து அகற்றும் பணியானது மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு வாசிகளை நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தி மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர்.

இன்னும் 2 நாட்களுக்கு வேகவதி ஆற்றில் இந்த வெள்ளப்பெருக்கு நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தற்போது போலீசாருடன் இணைந்து வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது ‌‌.

இந்த வெள்ளப்பெருக்கால் அருகாமை பகுதிகளில் பொதுமக்கள் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வேகவதி கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கான குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கீழ்கதிர்பூர் பகுதியில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளானது கட்டப்பட்டது. இந்த நிலையில் ஒரு சொற்ப அளவிலானோரே அங்கு குடியேறிய நிலையில் மீதமுள்ளவர்கள் செல்ல மறுத்து தொடர்ந்து இங்கேயே இருந்து வருவது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்