< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் பலி; சாலையோர ஓட்டலில் சாப்பிட்டபோது சரக்கு வேன் மோதியது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் பலி; சாலையோர ஓட்டலில் சாப்பிட்டபோது சரக்கு வேன் மோதியது

தினத்தந்தி
|
27 Sept 2023 1:40 PM IST

சாலையோர தள்ளுவண்டி ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது சரக்கு வேன் மோதி காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பலியானார்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காஞ்சீபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான நாகராஜ் (வயது 56) பங்கேற்க வந்திருந்தார்.

இவருடன் மாவட்ட செயலாளர் அமாவாசை (61) என்பவரும் உடன் வந்திருந்தார். இந்த நிலையில் கூட்டம் முடிந்ததும் இரவில் அவர்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் மகள் வீடு கிழக்கு தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் உள்ளது.

அங்கு செல்வதற்காக அழகிரி புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக நாகராஜும், அமாவாசையும் தனி காரில் புறப்பட்டனர். கே.எஸ்.அழகிரி அவரது மகள் வீட்டுக்கு சென்ற பின்னர் அவர்கள் இருவரும் காரில் காஞ்சீபுரம் புறப்பட்டனர். நாகராஜ் வாலாஜாபாத் அருகே உள்ள அளவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இரவு வெகுநேரமாகி விட்டதால் நாகராஜூம், அமாவாசையும் ஓட்டலில் சாப்பிட முடிவு செய்தனர். மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டு விட்டதால், நள்ளிரவில் கிழக்கு தாம்பரம் அடுத்த வேளச்சேரி சாலையோரம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகே இருந்த தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட சென்றனர்.

அங்கு சாலையோரம் காரை நிறுத்திவிட்டு நாகராஜ், அமாவாசை மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேரும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதே கடையில் தாம்பரத்தை சேர்ந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர் உதயா ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் கிஷோர் மற்றும் உதயா சாப்பிட்டு முடித்து விட்டு அவர்கள் வந்த சரக்கு வேனில் புறப்பட வாகனத்தை இயக்கிய போது, தாறுமாறாக ஓடிய வாகனம் தள்ளுவண்டி ஓட்டல் மீது மோதியது.

இதில் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த நாகராஜ், அமாவாசை தள்ளுவண்டி நடத்திய குமார் (வயது 56) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். நாகராஜை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததில், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியான காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக நாகராஜ் மகன் கவுதம் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலை அருகே நின்று கொண்டிருந்த காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் வி.நாகராஜ் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 5 மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன். அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.

அளவூர் நாகராஜின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்