காஞ்சிபுரம்
மாங்காடு நகராட்சியில் ரூ.19 கோடியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு
|மாங்காடு நகராட்சியில் ரூ.19 கோடியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட சக்கரா நகர், ஜனனி நகர், அடிசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் வடிய பல நாட்கள் ஆனது.
இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஜனனி நகர், அடிசன் நகர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக ரூ.19.37 கோடி மதிப்பீட்டில் 8.55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் நேரடியாக இந்த மழைநீர் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும்படி தந்தி கால்வாயுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நடந்து முடிந்துள்ள பணிகள் மற்றும் பருவமழைக்கு முன்பாக மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் சுமா, நகரமன்ற தலைவர் சுமதி முருகன், துணை தலைவர் ஜபருல்லா, நெடுஞ்சாலை துறை மற்றும் மின்சார துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.