< Back
மாநில செய்திகள்
கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு ஏலம் ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு
மாநில செய்திகள்

கனகாம்பரம் கிலோ ரூ.1,200-க்கு ஏலம் ஒரே நாளில் 680 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
15 Aug 2023 12:22 AM GMT

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ ஒரே நாளில் கிலோ ரூ.680 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ ஒரே நாளில் கிலோ ரூ.680 உயர்ந்து ரூ.1,200-க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

5 டன் பூக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,200

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.350-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.105-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.315-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.150-க்கும், செண்டுமல்லி ரூ.37-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.520-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.35-ம், முல்லை ரூ.60-ம், செண்டுமல்லி ரூ.13-ம், பட்டுப்பூ ரூ.27-ம், கனகாம்பரம் ரூ.680-ம், அரளி ரூ.80-ம், செவ்வந்தி ரூ.30-ம், சம்பங்கி ரூ.60-ம் விலை உயர்ந்து ஏலம் போனது. கனகாம்பரம் பூ ஒரே நாளில் 680 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போட்டி

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 'மார்க்கெட்டுக்கு கனகாம்பரம் பூ மொத்தம் 5 கிலோ மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஆனால் கனகாம்பரம் பூவை ஏலம் எடுப்பதில் கர்நாடக மாநில வியாபாரிகளிடம் போட்டி ஏற்பட்டது. இதனால் கனகாம்பரம் பூ விலை உயர்ந்து விற்கப்பட்டது,' என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்