கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது, சசிகலாவுக்கு தான் டிரைவராக இருந்தார் - எடப்பாடி பழனிசாமி
|கட்சிக்கு எதிரானவர்களை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து சேலத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இன்று நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இது நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி. தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம்....
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு மதுரை அ.தி.மு.க. மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒன்றாக உள்ளது என்பது மதுரை மாநாடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். இனியாவது பிளவு ஏற்பட்டு விட்டது என்று கூறுவதை நிறுத்திவிடுங்கள். கட்சிக்கு எதிரானவர்களை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் தான் தனபால். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். யார் வேண்டுமானாலும் ரோட்டில் பேசுவார்கள். பேசுவது சரியா தவறா என்று பார்க்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். கனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது. சசிகலாவுக்கு தான் அவர் டிரைவராக இருந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.