திருச்சி
அரசு-தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா
|அரசு-தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் கல்வியில் புரட்சி செய்தவர். அவர் ஏழை மாணவர்களின் கல்விக்கு ஆற்றிய அரும்பணியை காலத்தால் மறக்க இயலாது. இதனால் காமராஜரின் பிறந்தநாள் விழா தமிழகத்தில் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, காமராஜரின் 121-வது பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நேற்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நேற்று செயல்பட்டன.
அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கிராமப்புற பள்ளிகளில் ஊர் பொதுமக்கள் தங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச்சீர் என்ற பெயரில் அன்பளிப்பாக வழங்கினர்.