பெரம்பலூர்
காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
|காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் 121-ம் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விழாவில் அனைவரையும் 7-ம் வகுப்பு மாணவி பிரியங்கா வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமையாசிரியர் தொட்டியான் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்க்கை குறித்து விரிவாக பேசினார். இதில் வயலப்பாடி இளைஞர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களுக்கு காமராஜர் பற்றிய பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி, வகுப்பு வாரியாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை தன்னார்வலர் சத்யராஜ் வழங்கினார். பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதியில் 8-ம் வகுப்பு மாணவி நிரோசா நன்றி கூறினார்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் பொறுப்பு தலைமையாசிரியர் லெனின் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். காமராஜரின் சிறப்புகள் குறித்து ஆசிரியர்கள் ராமலிங்கம், காவேரி, சாந்தி ஆகியோர் பேசினர். காமராஜர் பற்றி மாணவிகள் பேசினர். ஸ்ரீநிதி, சுகந்தனி கவிதை வாசித்தனர். தலைமை ஆசிரியர் ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். இதில் ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.