< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா தேர்பவனி

தினத்தந்தி
|
16 Aug 2023 12:15 AM IST

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா தேர்பவனி நடந்தது.

நாலாட்டின்புத்தூர்:

காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதாஆலய விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர்.

புனித பரலோக மாதா திருத்தலம்

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பரலோக மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் விண்ணேற்பு பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு மறையுரை சிந்தனை, நற்செய்தி வழங்கப்பட்டது. கடந்த 12-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு நடைபெற்றது. மறுநாள் காலை 8 மணிக்கு புதுநன்மை விழா, மாலை 6 மணிக்கு புதுமை தேரோட்டம் அர்ச்சிப்பு நிகழ்வு நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.

தேர்பவனி

நேற்று முக்கிய விழாவான தேரடி திருப்பலி நடந்தது. இதையொட்டி அதிகாலை 2 மணியளவில் பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பரலோக மாதா மற்றும் ஆரோக்கிய மாதா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் ஆலயத்தை சுற்றி கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 2 மணியளவில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், இரவு 7 மணியளவில் திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடந்தது.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, காமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வி, அ.தி.மு.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, தி.மு.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், காமநாயக்கன்பட்டி கிளை செயலாளர் லூர்துராஜ், திருத்தல பேரவை துணை தலைவர் வியாகப்பராஜ், தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் சோனா. அந்தோணிராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ஜோக்கின்மரியவியாகப்பன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் செல்வராஜ் நாடார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோயில்பிள்ளை, கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வானரமுட்டி முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் ராமர், தொழிலதிபர்கள் அருள், வின்சென்ட், ஜான்சன், வியாகப்பராஜ், சூசை பிரான்சிஸ், சவரிமுத்து, ஆனந்த், முத்துக்குமார், பால்பண்ணை சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பங்கு இறைமக்கள் மற்றும் திருத்தலஅதிபர் அந்தோணி குரூஸ், உதவி பங்குதந்தை செல்வின் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்