< Back
மாநில செய்திகள்
கவர்னர் தனது பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றிக்கொள்வாரா? - கமல்ஹாசன் சரமாரி கேள்வி
மாநில செய்திகள்

கவர்னர் தனது பெயரை 'ரவி' என்பதற்கு பதிலாக 'புவி' என மாற்றிக்கொள்வாரா? - கமல்ஹாசன் சரமாரி கேள்வி

தினத்தந்தி
|
6 Jan 2023 6:58 PM IST

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றச் சொல்லுவதா?, கவர்னர் தனது பெயரை ‘ரவி’ என்பதற்கு பதிலாக ‘புவி’ என மாற்றிக்கொள்வாரா? எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறுசுவை விருந்து அளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

பா.ஜ.க. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே, காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான அரசியலை தடுக்கவேண்டும். தேசத்தின் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், தேசிய ஒற்றுமை யாத்திரை அமைந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். நான் 'ஏ' சொன்னால் 'ஏ' சொல்லுங்கள். 'பி' சொன்னால் 'பி' சொல்லுங்கள். 'சி' சொன்னால் 'சி' சொல்லுங்கள்.

உங்கள் ஆதரவுடன் மட்டுமே தலைமை பொறுப்பில் இருக்கிறேன். எனவே, கட்சியின் தலைமை பிறப்பிக்கும் கட்டளைகள், உத்தரவுகளை மீறுபவர்கள் மீது பாராமுகத்தோடு இருக்கமாட்டேன். சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்தவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீங்கள் (கட்சியினர்) செய்யும் நல்லது, கெட்டது என அனைத்தையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன். உங்களிடம் பஞ்சாயத்து செய்ய என்னிடம் நேரமில்லை.

எந்த கட்சியாக இருந்தாலும், மதத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது ஏனென்றால், இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு உறவு. நம்முடைய நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ, அவர்கள் பின்னால்தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். கட்சியை அடுத்த கட்டத்துக்கு நோக்கி நகர்த்துகிறோம். இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே தேச ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது.

நீண்ட, நெடிய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்திருக்கிறது. இதை மாற்ற சொல்லுவதற்கு அவர் (கவர்னர்) யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதிலாக புவி என மாற்றச்சொன்னால், மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்