< Back
மாநில செய்திகள்
அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து
மாநில செய்திகள்

'அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து

தினத்தந்தி
|
8 Dec 2023 9:41 AM IST

5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

சென்னை,

`மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையில் பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னை, பொன்னேரி, திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது அரசை குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. நாங்கள் எப்போதும் அப்படிதான் செய்து கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்தில் கூட இந்த வீட்டை நோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்க முடிவு செய்தேன். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை.

இதுபோன்ற இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம். அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல, அதை பிறகு செய்யலாம், நாம் இப்போது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். வல்லுனர்களுடன் ஆலோசித்து இதுபோன்ற பேரிடர்களுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும். நாம் மக்களுக்கு உதவி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல அந்த பொறுப்பு உங்களுக்கும்தான் உள்ளது.

தற்போது வடசென்னை, பொன்னேரி, திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5,000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்' என்று கூறினார். மேலும் செய்தியாளர் ஒருவர் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கமல்ஹாசன் தேர்தல் குறித்து பிறகு பேசலாம், முதலில் தண்ணீர் வடியட்டும் என்று பதிலளித்தார்.

மேலும் செய்திகள்