ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்..!
|கோவையை சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் பரிசளித்தார்.
சென்னை,
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார். இதையடுத்து கனிமொழி எம்.பி பயணம் செய்த சிறிது நேரத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை பணியில் இருந்து ஷர்மிளா ராஜினாமா செய்தார். பேருந்தின் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசல் கார் ஒன்றை இன்று பாரிசாக வழங்கினார். கமல் பண்பாட்டு மையம் சார்பாக அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து விலகிய நிலையில், ஷர்மிளாவுக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா. பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார் அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது மிகுந்த வேதனை அடைந்தேன். ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை.
கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் அடக்கிவைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில் ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.