< Back
மாநில செய்திகள்
மாட்டு வியாபாரி மகன் முதல் போலீஸ் அதிகாரி வரை 5 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி கைது
மாநில செய்திகள்

மாட்டு வியாபாரி மகன் முதல் போலீஸ் அதிகாரி வரை 5 பேரை திருமணம் செய்த 'கல்யாண ராணி' கைது

தினத்தந்தி
|
15 July 2024 4:58 AM IST

சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 30 வயது பேக்கரி உரிமையாளருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். எங்கு தேடியும் வரன் அமையாததால் அந்த பேக்கரி உரிமையாளர் இணையதள செயலி மூலம் இணையை தேட தொடங்கினார். அதன் வழியே அவருக்கு கிடத்த துணைதான் கொடுமுடியை சேர்ந்த சத்யா (வயது 30). முதலில் இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகி பயோடேட்டாவை பரிமாறிக்கொண்டனர். அதன்பின்னர் இருவரும் தினமும் செல்போனில் பேசிப் பேசி திருமண பந்தம் வாசல் வரை வந்து விட்டனர்.

அப்போது சத்யா திடீரென்று, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாகவும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் தடல்புடலாக மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மணமகளுக்கு புன்னகையோடு பொன் நகையும் வாங்கி அணிய மாப்பிள்ளைவீட்டார் விருப்பப்பட்டனர்.

அதன்பின்னர் நகைகளை வாங்கிக் கொடுத்து மணமகளை அணிய வைத்து மாப்பிள்ளை வீட்டார் அழகு பார்த்தனர். சில நாட்கள் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவி சத்யாவின் நடவடிக்கை பேக்கரி உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் புதுமண தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சத்யா தனது புது கணவரை மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில் சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் அதிர்ச்சி தகவல் எப்படியோ தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பேக்கரி உரிமையாளர் தனது புதுமனைவியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சத்யாவிடம் விசாரித்தனர்.

அப்போது சத்யாவுக்கு புரோக்கராக கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் தாராபுரம் வரவழைத்து விசாரித்தனர். பின்னர் இருவரும் போலீசாரின் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவதாக கூறி நைசாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பின்னர் இருவரும் தலைமறைவானார்கள்.

இதையடுத்து சத்யாவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் புதுப்பெண் சத்யாவையும், கல்யாண புரோக்கர் தமிழ்ச் செல்வியையும் தேடி வந்தனர். அப்போது அவர்களது செல்போன் சிக்னல் புதுச்சேரியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று புதுச்சேரி சென்று அங்கு தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து தாராபுரம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், கிணறு தோண்ட பூதம் கிளம்பியது போல் போலீசாருக்கு கிடைத்த தகவல் அவர்களை தலைசுற்ற வைத்தது. அதாவது சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவருடன் சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு அடுத்து கரூரைச் சேர்ந்த போலீஸ்-சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை காதலித்து கரம் பிடித்தார்.

பின்னர் சப்-இன்ஸ்பெக்டரையும் உதறி தள்ளிவிட்டு புதிதாக கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாசை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார். அதோடு நிற்கவில்லை, 2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன்விளைவாக இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில்தான் செல்போன் செயலி மூலம் தாராபுரத்தை ேசர்ந்த பேக்கரி உரிமையாளரிடம் பழகி அவரை தன் அழகில் மயக்கி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு ஓட்டம்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கல்யாண ராணி சத்யா மீது கொலை முயற்சி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச் செல்வி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவரையும் கைது செய்தால்தான் இன்னும் எத்தனை பேருக்கு சத்யாவை திருமணம் செய்து கொடுத்தார் என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கல்யாண ராணி சத்யாவின் கல்யாண லீலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்