< Back
மாநில செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்
கரூர்
மாநில செய்திகள்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்

தினத்தந்தி
|
5 April 2023 7:18 PM GMT

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பங்குனி திருவிழா

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சம். உலகில் இருக்கும் பல்வேறு வகையான பல கோடி உயிர்களை இறைவனின் சார்பாக படைப்பவராக பிரம்ம தேவர் கருதப்படுகிறார். தன்னால் அனைத்து உயிர்களையும் உருவாக்க முடிகிறது என்று ஆணவப்பட்ட பிரம்ம தேவனின் கர்வத்தை தீர்த்த தலம் தான் "கரூர் கல்யாண பசுபதீஸ்வரர்" கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நந்தி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், பூதகி வாகனம், ரிஷப வாகனம், திருக்கயிலாய வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தேரோட்டம்

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி சவுந்தரநாயகி கணபதி, பாலமுருகன், வள்ளி தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுதருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

தேர் கோவிலை சுற்றியுள்ள 4 ரதவீதிகளிலும் உலா வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள் தேரின் முன்பு நின்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இன்று தீர்த்தவாரி

இன்று (வியாழக்கிழமை) நடராஜ மூர்த்திக்கு தீர்த்தவாரியும், நாளை விடையாற்றி உற்சவமும், நாளை ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா நாட்களில் நால்வர் அரங்கில் சொற்பொழிவும், இசைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்