செங்கல்பட்டு
கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது; ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு
|கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது என்று ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ராஜேந்திர சிங் தலைமையில் குழுவினரும், கமாண்டன்ட் அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினரும் நேற்று வந்தனர். இந்த குழுவினருடன் மூத்த ஆலோசகர் எஸ்.கே.கோஷ், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், உதவி கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, இணை இயக்குனர் டாக்டர் பிரியா ராஜ் ஆகியோரும் வந்தனர். அங்கு அவசரகால தயார்நிலைத்திட்டத்தை ஆய்வு செய்தனர். ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு வசதி, கட்டுப்பாட்டு அறை, டர்பைன் உருவாக்கும் வசதி, புகுஷிமாவுக்குப் பின் அமைக்கப்பட்ட ஹூக்-அப் புள்ளிகள் மற்றும் மின்நிலையத்தில் உள்ள மற்ற அணுசக்தி வசதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த குழுவினருக்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.வெங்கட்ராமன், மின்நிலைய இயக்குனர் சுதிர் பி.ஷெல்கே ஆகியோர் தெளிவாக விளக்கி கூறினர். இதையடுத்து இந்த குழுவினர், அணுசக்தி பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர். இதே போன்ற செயல்பாட்டை எதிர்காலத்திலும் சிறப்பாக தொடர வேண்டும்' என்று வாழ்த்து கூறி புறப்பட்டு சென்றனர்.