செங்கல்பட்டு
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தற்கொலை; உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது
|கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் உறுப்புகளை தானம் செய்யும் படியான உருக்கமான கடிதம் சிக்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் வேணு, இவரது மகன் கோபிநாத் (வயது 28). இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள அறிவியல் உதவியாளராக சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருக்கு கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளதால் தனது பெற்றோருடன் தங்கி கோபிநாத் தினமும் வேலைக்கு சென்று வந்தார்.
கோபிநாத்துக்கும் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைப்பதற்காக கோபிநாத்தின் பெற்றோர் சென்னையில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் கோபிநாத் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைப்பற்காக சென்னை சென்ற தனது பெற்றோரிடம் சினமாவுக்கு செல்வதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இரவு காட்சியை பார்த்துவிட்டு வந்து கல்பாக்கத்தில் உள்ள தனது குடியிருப்பில் தனியாக தூங்கியுள்ளார். நேற்று காலை சினிமா பார்த்துவிட்டு வந்த அசதியில் தனது மகன் தூங்கி விட போகிறான். வேலைக்கு செல்ல அவனை எழுப்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது தந்தை வேணு மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்த வேணு, புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு உடனே போன் செய்து கல்பாக்கத்தில் உள்ள தனது மகன் குடியிருப்பிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.
புதுப்பட்டினத்தில் உள்ள அவரது உறவினர்கள் கல்பாக்கத்திற்கு சென்று அங்குள்ள குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கோபிநாத் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கோபிநாத் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில் நிச்சயதார்த்த அழைப்பிதழ் வைக்க சென்ற தந்தை வேணுவுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தற்கொலை விவகாரம் குறித்து கல்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கோபிநாத் தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சி்க்கியது. அந்த கடிதத்தில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் என்னை மன்னித்துவிடு.. நான் உன்னை விட்டு செல்கிறேன். நீ என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நல்ல ஒரு பையனை பார்த்து திருணம் செய்து கொள்ளவேண்டும்.
நான் இறந்த பிறகு மத்திய அரசால் வழங்கப்படும் செட்டில்மெண்ட் பணம் முழுவதையும் எனது தாயிடம் ஒப்படைத்து விடுங்கள், நான் இறந்த பிறகு உடல் நலம்குன்றி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழைகளுக்கு எனது உடல் உறுப்புகளை தானம் செய்து விடுங்கள். பணம், பணம். என்று வாழும் மனிதர்கள் உள்ள இந்த உலகத்தில் வாழ எனக்கு பிடிக்கவில்லை. எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று அந்த கடிதத்தில் கோபிநாத் உருக்கமான எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இந்த தற்கொலை சம்பவம் பற்றி விசாரித்து வருகின்றனர்.