< Back
மாநில செய்திகள்
கல்லணை காவிரி-வெண்ணாற்றில் குளியல் தொட்டி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கல்லணை காவிரி-வெண்ணாற்றில் குளியல் தொட்டி

தினத்தந்தி
|
13 July 2023 1:10 AM IST

கல்லணை காவிரி-வெண்ணாற்றில் குளியல் தொட்டி

பாதுகாப்பான முறையில் குளிக்க கல்லணை காவிரி-வெண்ணாற்றில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. உடைமாற்றும் அறை அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கல்லணை

காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கல்லணையில் இருந்து பிரதான ஆறுகளான காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் பிரித்து வழங்கும் அணையாகவும் விளங்குவது கல்லணை. தினமும் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கல்லணைக்கு வந்து பார்வையிட்டு மகிழ்கின்றனர்.

கல்லணையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், சிறுவர் பூங்கா அமைந்துள்ளன. அணைகளில் இருந்து சீறிப்பாயும் தண்ணீரில் குளிப்பதை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக விரும்புகின்றனர். பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாலும் சீறிப்பாய்ந்து வெளியேறும் மதகுகளின் அருகிலும், ஆழமான பகுதிகளிலும் ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகள் குளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.

காவிரி, வெண்ணாற்றில் குளியல் தொட்டி

பாதுகாப்பான முறையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தொட்டி போன்ற ஒரு அமைப்பை காவிரி மற்றும் வெண்ணாற்றில் அமைக்க முடிவு எடுத்து கல்லணை காவிரி ஆற்றில் பாதுகாப்பான குளியல் இடம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

அதேபோல் காவிரி விளக்கக்கூடத்தின் அருகில் வெண்ணாற்றிலும் குளியல் தொட்டி ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றின் நடுவில் கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு தண்ணீர் உட்பகுதி வெளியேறும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இறங்கி குளிப்பதற்கான படிக்கட்டுகள் அதன் அருகில் சாய்தளங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. ஆறுகளில் தண்ணீர் குறைவாக திறந்து விடும் நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் மதகுகளின் அருகில் சென்று குளித்து வருகின்றனர்.

உடை மாற்றும் அறை

காவிரியில் அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் நேற்று மிகக் குறைவான அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குளியல் தொட்டியில் தண்ணீர் இல்லாத நிலை காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் மதகுகளின் அருகில் சென்று குளிப்பதையும் காண முடிந்தது. காவிரி மற்றும் வெண்ணாற்றில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தனித்தனியாக ஆண்கள், பெண்களுக்கு என உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் செய்திகள்