கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை விசாரணையில் தகவல்
|கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடைபெறும் பள்ளி வளாகம் அருகே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி. அவர் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தநிலையில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் பள்ளி வளாகம் அருகே அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக உளவுத்துறை போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
"ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம்" என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் உளவுத்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.