< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கு -  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தினத்தந்தி
|
1 Nov 2022 3:27 PM IST

கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதால் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் இந்த சாலையில் சர்க்கரை ஆலைகள் உள்ளதால் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் அதிகமாக உள்ளன.

எனவே இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்ட போதும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. சாலையை தரம் உயர்த்தினால் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கான பயண நேரமான இரண்டரை மணி நேரம், 45 நிமிடங்களாக குறையும். எனவே, இச்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்