கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
|மாணவி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இந்த பள்ளியில் இது போன்று இதுவரை 7 உயிரிழப்புகள் மர்மமான முறையில் நடந்ததாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை பதறச் செய்கிறது.
மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் பள்ளி நிர்வாகம் தான் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராடிவருகிறார்கள்.
சுமார் 5 ஆயிரம் குழந்தைகள் வரை படிக்கும் இந்த பள்ளியில் தொடரும் மர்ம மரணத்தால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதால் தமிழக அரசு உடனடியாக இந்த பள்ளியை அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மாணவி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும். குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.