கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கு: சிறையில் இருந்து பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீனில் விடுதலை
|கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் கைதான பள்ளிக்கூட தாளாளர் உள்பட 5 பேர் நேற்று சேலம் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிபந்தனை ஜாமீன்
இவர்கள் 5 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதில் ஆசிரியைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேரும் மதுரை மாவட்டம் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
விடுதலை
இதையடுத்து அவர்களுக்கான நிபந்தனை ஜாமீன் உத்தரவு சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 7.40 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோரும், பெண்கள் சிறையில் இருந்து செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிபிரியா ஆகியோரும் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.