கடலூர்
விடுதியில் இறந்த 10 நாட்களுக்கு பிறகு பள்ளி மாணவி உடல் அடக்கம் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
|கனியாமூர் பள்ளி விடுதியில் இறந்து 10 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவிக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து தமிழகத்தை உலுக்கியது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ஸ்ரீமதி(வயது 17), மகன் சந்தோஷ்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி ஸ்ரீமதி பிளஸ்-2 படித்து வந்தார். சந்தோசும் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தினசரி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்று வந்தான்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மறுபிரேத பரிசோதனை
இதில் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, மாணவியின் உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிடும் படி அரசு தரப்பில் ஐகோர்ட்டில் கடந்த 21-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி தரப்பில் உடலை 23-ந்தேதி(அதாவது நேற்று) பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
இதையடுத்து, மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் செய்திருந்தனர்.
அதேநேரத்தில் ஏற்கனவே மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது. எனவே அதுபோன்ற அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உஷார்ப்படுத்தப்பட்டு இருந்தது.
கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூர் செல்லும் சாலையெங்கும் பாதுகாப்புக்காக அதிரடி படைவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.
வெளிநபருக்கு அனுமதி மறுப்பு
அதேபோல் இறுதி சடங்கு நடைபெற உள்ள பெரியநெசலூர் கிராமத்திலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து யாரும் மாணவி இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி இல்லை, உள்ளூர் நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கிராமத்தில் தண்டோரா போட்டும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் நேற்று முன்தினம் முதல் பெரியநெசலூர் கிராமத்துக்குள் வரும் அனைத்து சாலை பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து வெளிநபர்கள் யாரேனும் கிராமத்துக்குள் வருகிறார்களா? என்று விடிய, விடிய போலீசார் கண்காணித்தனர். இதன் மூலம் பெரியநெசலூர் கிராமத்தையே போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
10 நாட்களுக்கு பிறகு உடல் ஒப்படைப்பு
சட்ட போராட்டம் காரணமாக, கடந்த 10 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீமதியின் உடலை பெற்று செல்வதற்காக அவரது பெற்றோர் நேற்று காலை 6.30 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் அமைச்சர் சி.வெ.கணேசனும் வந்திருந்தார்.
மருத்துவமனை ஊழியர்கள், பிணவறையில் இருந்த ஸ்ரீமதியின் உடலை வெள்ளை துணியால் கட்டி, முகம் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் எடுத்து வந்தனர். மகளின் உடலை பார்த்தவுடன், அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
அப்போது, அமைச்சர் கணேசன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பெரியநெசலூர் வந்த மாணவி உடல்
காலை 7 மணிக்கு ஸ்ரீமதியின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, பெரியநெசலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீ்மதியின் உடலை எடுத்து சென்ற வாகனத்தின் முன்னும், பின்னும் பாதுகாப்புக்காக போலீஸ் வாகனங்கள் சென்றபடி இருந்தது.
இந்த வாகனங்களில் ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார், தேன்மொழி, சுதாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பகலவன், ஸ்ரீநாதா, 22 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என்று ஏராளமான போலீசார் பின்தொடர்ந்து சென்றனர்.
மாணவியின் உடலை சுமந்து சென்ற வாகனம் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாதுருகம், உளுந்தூர்பேட்டை, வேப்பூர் வழியாக பெரியநெசலூருக்கு காலை 8.30 மணிக்கு சென்றடைந்தது. அப்போது அமரர் ஊர்தியை மட்டுமே கிராமத்துக்குள் செல்ல அனுமதித்தனர். வெளியாட்கள் யாரையும் கிராமத்துக்குள் அனுமதிக்கவில்லை.
கதறி அழுத பெண்கள்
பின்னர் மாணவியின் வீட்டுக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தங்கள் கிராமத்தில், கண்முன்னே ஓடி விளையாடிய ஸ்ரீமதி, தற்போது கண்ணாடி பேழைக்குள் வெள்ளை துணிகளால் கட்டப்பட்டு பிணமாக கிடந்த காட்சியை கண்டதும், துக்கம் தாங்காமல் அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர். சில பெண்கள், கண்களில் கண்ணீருடன் கண்ணாடி பேழையின் வழியே மாணவியின் நெற்றியில் முத்தமிட்டது, பார்ப்பவரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.
மாணவியின் தாய் செல்வி, தனது தலையிலும், உடலிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதார். அவரை ஆறுதல் படுத்த முடியாமல் அங்கிருந்த பெண்கள் தவித்தனர்.
இதனிடையே எம்.எல்.ஏ.க்கள் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், புவனகிரி அருண்மொழிதேவன், கள்ளக்குறிச்சி செந்தில்குமார் மற்றும் அ.தி.மு.க. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, மூவேந்தர் முன்னேற்ற கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோரும் அங்கு வந்து மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
பின்னர், மாணவியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு, 11 மணிக்கு மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் கிராமத்து மக்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.
ஊருக்கு வெளியே சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொக்லைன் எந்திரத்தால் தோண்டப்பட்ட குழி தயார் நிலையில் இருந்தது.
புத்தகங்களுடன் உடல் அடக்கம்
இறுதி ஊர்வலம் அங்கு வந்தடைந்தவுடன், மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவியின் உடலுடன் அவரது பாடப்புத்தகங்களும் வைக்கப்பட்டது. முன்னதாக மாணவிக்கு அங்கிருந்தவர்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் இறுதி சடங்கில் ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் இடுகாடு வரைக்கும் திரண்டு வந்து மாணவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி சென்றார்கள்.
இதன் பிறகு மாணவியின் வீட்டுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.பி. கவுதமசிகாமணி நேரில் வந்து மாணவியின் பெற்றோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறி சென்றார்.
---
போலீஸ் வாகனம் மீது மோதிய அமரர் ஊர்தி வாகனம்
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் உடலை ஏற்றிக்கொண்டு பெரியநெசலூர் நோக்கி அமரர் ஊர்தி புறப்பட்டது. எடைக்கல் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது, முன்னால் பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம் ஒன்று திடீரென நின்றது. இதனால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து நின்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் வந்த வாகனம் மீது, அமரர் ஊர்தி மோதியது. இதில் அதிர்ஷ்டவமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து 2 நிமிடம் அங்கு நின்ற வாகனங்கள் பின்னர், பெரியநெசலூர் கிராமம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.