கள்ளக்குறிச்சி: கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
|கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தற்போது பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.
இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் நடந்த கலவரத்தில் பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவி எழுதிய கடிதம் உள்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் கைப்பற்றபட்டுள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விஷயத்தையும் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளோம்.
ஆசிரியர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். சிபிசிஐடி விசாரணைக்கு தேவை இருக்காது. பள்ளி மீது எந்த தவறும் இல்லை.
இதுதொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியிருக்கிறோம். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டி, ஒருசிலர் தனியார் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை தடுப்பதற்கு போலீசார் எவ்வளவோ முயன்றனர். ஆனால் போலீசாரின் உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் சென்றதால், தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைத்துள்ளனர். இதனையடுத்து போலீசாரையும், அதிகாரிகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
எனவே இந்த போராட்டக்காரர்கள் உடனடியாக வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். காவலர்கள், காவல்துறை வாகனங்கள், பள்ளிக்கூடத்தை தாக்குவது சூறையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கலவரத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், மேலும் 500 காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்
கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும் .உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும். அமைதியாக தொடங்கிய போராட்டம் திடீரென கலவரமாக மாறியுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பக்கூடாது. போராட்டம் நடத்த வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்" என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.