கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்
|கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காச நோய் துணை இயக்குனர் சுதாகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் அனைவரும் தேசிய காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காசநோய் பரிசோதனை கருவிகளை அரசு மருத்துவமனைக்காக டாக்டர்களிடம் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து காசநோய் உதவி போன் நம்பருடன் கூடிய விழிப்புணர்வு பதாகைகளை திறந்து வைத்ததோடு, காச நோயால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றி டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஊட்டச்சத்து உணவுகள்
அதனை தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் வாகனம் மூலம் வீட்டிற்கு சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வதற்கும், மருந்து எடுத்துக்கொள்வதற்கும் 6 மாதம்வரை ரூ.500 வழங்கப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து 8 மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரவணனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா, ஏ. ஆர்.டி.மையம் அலுவலர் டாக்டர்சாமுண்டீஸ்வரி, ரோட்டரி சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் பாலகிருஷ்ணன், காச நோய் மருத்துவ அலுவலர் டாக்டர் பொய்யாமொழி, 108 ஆம்புலன்ஸ் ஊர்தி மேலாளர் அறிவுக்கரசு மற்றும் டாக்டர்கள், காசநோய் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.