< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை  மருத்துவமனைக்கு பெற்றோர் வரவில்லை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறு பிரேத பரிசோதனை மருத்துவமனைக்கு பெற்றோர் வரவில்லை

தினத்தந்தி
|
19 July 2022 11:06 PM IST

நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவக்குழுவினர் முன்னிலையில் கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி(வயது 17) கடந்த 13-ந் தேதியன்று மர்மமான முறையில் இறந்தார். மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு கடந்த 17-ந் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்ததோடு, இதற்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் கோகுல்ராமன், தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் சாந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து அந்த குழுவினர் முன்னிலையில் மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அப்போது மாணவி தரப்பில் அவரது தந்தை மற்றும் அவர்களது தரப்பு வக்கீல் உடன் இருக்கலாம், மறு பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் தங்கள் சார்பில் ஒரு டாக்டரை, மறு பிரேத பரிசோதனையின்போது நியமிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

மருத்துவமனையில் பாதுகாப்பு

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனிடையே மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு போலீஸ் ஐ.ஜி.க்கள் சந்தோஷ்குமார், தேன்மொழி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதித்தனர். அதன்படி, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு வந்த ஒருவரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். வெளிநபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

பெற்றோர் வரவில்லை

இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனால் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு மாணவியின் பெற்றோர் யாரும் வரவில்லை என்று ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் முறையிடப்பட்டது.

அதற்கு, மாணவியின் உடலை பெற்றோர் இல்லாமலேயே மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், பெற்றோர் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்

இதையடுத்து மாணவியின் உடலை மதியம் 1 மணியளவில் மறு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர் வராததால், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை, மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டு சுவரில், அங்குள்ள வருவாய்த்துறையினர் ஒட்டினர். பின்னர் அந்த தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையிடம் தெரிவித்தனர்.

வீடியோ பதிவு

இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர்.

இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருந்து மாணவி ஸ்ரீமதி உடலை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று, மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே அறைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மாணவியின் உடல் எக்ஸ்ரே செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி சவக்கிடங்கிற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. அதன்பின், சில மணி நேரம் மாணவியின் பெற்றோர் வருவார்கள் என்று எண்ணி, மருத்துவக்குழுவினர் காத்திருந்தனர்.

ஆனால் மாலை 3.45 மணி வரை ஆகியும் யாரும் வராததால் 3.50 மணியளவில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும் பணி, மருத்துவக்குழுவினர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. 2½ மணிநேரத்துக்கு மேலாக நடந்த மறுபிரேத பரிசோதனை மாலை 6.30 மணிக்கு முடிந்தது. மாணவியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், மறு பிரேத பரிசோதனை செய்தனர். அதனை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ஐகோர்ட்டு உத்தரவு படி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோவை கோர்ட்டில் சமர்ப்பிப்போம்.

மேலும் மாணவியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வர இருக்கிறது. அதன் விசாரணையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றனர்.

மேலும் செய்திகள்