< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் நடந்த  கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் வெளிமாவட்ட போலீசாரும் தீவிரம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் வெளிமாவட்ட போலீசாரும் தீவிரம்

தினத்தந்தி
|
19 July 2022 10:56 PM IST

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் வெளி மாவட்ட போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி போராட்டக்காரர்கள் அப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு பள்ளியை சூறையாடி அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்யும்படி போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யும் பணி தீவிரம்

இந்த தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளியில் கிடைத்த வீடியோ பதிவுகள், புகைப்படங்களின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுவரை கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மற்றவர்களை பிடிக்க கிராமம், கிராமமாக சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், இங்குள்ள வீடியோ பதிவுகள், புகைப்படங்களை அந்தந்த மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து அவர்கள் மூலமும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்