கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் சுட்டெரித்ததுடன், இரவு நேரங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழையும் பெய்து வந்தது. அந்த வகையில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6.50 மணிக்கு சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு 7 மணிக்கு இடி-மின்னலுடன் பெய்த மழையானது அரை மணி நேரம் விடாமல் கனமழையாக கொட்டித்தீர்த்தது.
இந்த மழை காரணமாக துருகம் சாலை, சேலம் மெயின்ரோடு உள்பட பல்வேறு தெருக்கள், சாலைகளில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீருடன் மழை நீரும் கலந்து ஆறாக ஓடியது. அப்போது கழிவுநீர் கால்வாய்களில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சாலைகளில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும் கள்ளக்குறிச்சியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோல் தியாகதுருகம், சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருவதால் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.