கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு - விரைவில் குற்றப்பத்திரிகை
|விஷ சாராய வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி சடையன், வேலு, கெளதம் ஜெயின் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஷச்சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கெளதம் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது, விஷச்சாராய சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் முழுவீச்சில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.