< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

தினத்தந்தி
|
6 Sept 2022 2:31 PM IST

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.

இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கனியாமூர் சக்தி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் 100 மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன் குவிந்தனர்.

பெற்றோர்களுடன், டிஎஸ்பி, ஆட்சியரின் பொது மேலாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி ஓரிரு நாட்களில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் பள்ளியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பெற்றோரிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் கனியாமூர் பள்ளியை திறக்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

கலவரத்தினால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மட்டுமின்றி அதனை தொடர்புடைய இசிஆர் இன்டர்நேஷனல் என்னும் சிபிஎஸ்இ பள்ளியும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர் குற்றச்சாட்டினர்.

மேலும் செய்திகள்