கள்ளக்குறிச்சி: 5 மாத பெண் குழந்தையை கொன்ற தாய் கைது
|தியாகதுருகத்தை சேர்ந்த 5 மாத பெண் குழந்தை கால்வாயில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தி இருந்தது.
வடலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மணிராஜ் (வயது 24). செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), லாவண்யா என்ற 5 மாத கைக்குழந்தையும் இருந்தது. மணிராஜ் வேறு ஊரில் தங்கி ஆடுகள் மேய்த்து வருகிறார். எனவே ராஜேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வந்தார்.
இந்த சூழலில் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் வடலூர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் மணிராஜ் 2 பேருடன் வந்து கைக்குழந்தையான லாவண்யாவை தூக்கிச் சென்றுவிட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரவேண்டும் என புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், தொழுதூர் பகுதியில் தங்கி ஆடு மேய்த்து வரும் மணிராஜை பிடித்து விசாரித்தனர். அதில் அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் புகார் கொடுத்த ராஜேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார், ராஜேஸ்வரியை பிடித்து கிடுக்கிப்படி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தனது குழந்தைக்கு காதில் சீழ் வடிந்ததால் மருந்து போட்டதாகவும், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதால் இறந்து விட்டதாக நினைத்து வடலூர்-கடலூர் சாலையில் உள்ள அய்யனேரி அருகே கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசி விட்டு தனது கணவர் குழந்தையை தூக்கிச் சென்று விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அய்யனேரி பகுதிக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தநிலையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் 5 மாத குழந்தையைக் கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசியதாக கைதான தாய் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.