கள்ளக்குறிச்சி சம்பவம்: "போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது" - அமைச்சர்கள் பேட்டி
|போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது போராட்டக்கார்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
இந்த நிலையில் போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து நேற்றைய கலவரத்தின்போது காயமடைந்த போலீசாரை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
சமூக வலைதளத்தின் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, தவறான தகவலால் ஒன்று கூடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் என்ற போர்வையில் விஷமிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரம் விரும்பத்தகாத விபத்து.
போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர். கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது. சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, கூடி தவறான முடிவை எடுத்து விட்டனர். கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.