< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி சம்பவம்... வதந்தி பரப்பிய 63 யூ டியூப் இணையதளங்களை முடக்க உத்தரவு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்... வதந்தி பரப்பிய 63 யூ டியூப் இணையதளங்களை முடக்க உத்தரவு

தினத்தந்தி
|
30 July 2022 11:28 AM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில், வதந்தி பரப்பிய 63 யூ டியூப் இணையதளங்களை முடக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.



சென்னை,



கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இவ்வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் விசாரணை அறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, உடற்கூராய்வு ஆய்வின்போது முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூ டியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்கு, 27 முகநூல் பக்கங்களில் உள்ள பதிவுகளை நீக்கவும், முடக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்திய நீதிபதி, காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, போலீசார் முடிவெடுக்கலாம் என அனுமதியளித்துள்ளார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்