< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம்: மேலும் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தினத்தந்தி
|
26 Aug 2024 7:15 PM IST

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் இதுவரை 22 பேர் போலீசார் கைது செய்திருந்தநிலையில் 8 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதே சமயம் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக 17 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்கவிருந்தனர். இதனையொட்டி இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதற்கட்டமாக 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதன்படி இந்த வழக்கில் ஏற்கனவே கைதான மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகியோர் மீது குண்டர் பாய்ந்துள்ளது. இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கடலூர் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்ற நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்