கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
|கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழந்தனர். ஒரு சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருசிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர். விஷ சாராயம் குடித்து நேற்றுவரை 50 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேபோல், சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நபரும் உயிரிழந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, விஷ சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.