கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கூரியர் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
|சேவை குறைபாடு செய்த கள்ளக்குறிச்சி கூரியர் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரியை சேர்ந்தவர் சங்கர். இவர் குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் குவைத் சென்றுள்ளார். ஆனால் செல்லும்போது ஓட்டுனர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே விட்டுச்சென்றுள்ளார்.
உடனே அவர் தனது தம்பி அருளை தொடர்புகொண்டு ஓட்டுனர் உரிமத்தை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி அருள், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு சென்று தனது அண்ணனின் ஓட்டுனர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் ரூ.3,500 செலவாகும் என்றும், 10 நாட்களில் செல்ல வேண்டுமெனில் ரூ.2,500 செலவாகும் என்றனர். அதற்கு அருள், ரூ.3,500-ஐ கொடுத்து 5 நாட்களில் கூரியர் கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் 10 நாட்களை கடந்தும் கூரியர், சங்கருக்கு கிடைக்கவில்லை.
இது குறித்து அருள், அந்த கூரியர் நிறுவனத்திற்கு சென்று விவரம் கேட்டபோது 1.2.2022 வரை சென்னையில் உள்ள கூரியர் நிறுவனத்திலேயே இருந்துள்ளதும், கள்ளக்குறிச்சி கூரியர் நிறுவனத்தினர் மிகவும் தாமதமாக அதனை அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அருள், இதுதொடர்பாக வளவனூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்புக்குழு தலைவர் சுப்பிரமணியன் மூலமாக விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினர்.
அதாவது மனுதாரர் அருளிடம் கூரியர் தபாலுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட கூடுதலாக தொகையை பெற்றதற்காக ரூ.1,500-யும் சேவை குறைபாட்டினால் அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் இழப்பீட்டையும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தையும் அருளுக்கு கள்ளக்குறிச்சி கூரியர் நிறுவனம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.