இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர் - 480 மண்டகப்படிகளில் எழுந்தருளல்
|கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
மதுரை,
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் நடைபெற்ற 2-வது நாள் திருவிழாவில் கள்ளழகர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது ½ மணி நேரத்திற்குமேல் திடீர் மழை பெய்தது. இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கள்ளழகர் மதுரைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் தங்கப்பல்லக்கில் 6 மணிக்கு மேல் புறப்பட்டு செல்கிறார்.
இந்தநிலையில் அழகர்மலை பகுதியில் மழைபெய்து, மலை குளிர்ந்தது பக்தர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.
இன்று மதுரை புறப்படும் அழகர், வழிநெடுக உள்ள 480-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் மதுரை மூன்றுமாவடியில் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
23-ந் தேதி காலையில் மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். 24-ந் தேதி சேஷவாகனத்தில் புறப்பாடும், தொடர்ந்து கருடவாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும் நடக்கிறது. அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 25-ந்தேதி இரவு பூப்பல்லக்கு சேவை, 26-ந்தேதி கள்ளழகர் பிரியாவிடைபெற்று அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். 27-ந்தேதி காலையில் இருப்பிடம் சேருகிறார்.