மதுரை
கள்ளழகர், ஆண்டாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
|கள்ளழகர், ஆண்டாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்
கள்ளழகர், ஆண்டாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில், சிறப்பு வாய்ந்த கள்ளழகர் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. இதையொட்டி விழா நாட்களில் உள்பிரகாரத்தில் கள்ளழகர் புறப்பாடு நடந்தது.
முக்கிய நிகழ்வாக வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை 6.25 மணிக்கு நடந்தது. மேளதாளம் முழங்க வர்ணக்குடை, பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தை சுற்றி வந்து எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்தன.
முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு, 'கோவிந்தா..." கோஷத்துடன் நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தன.
சர்வ அலங்காரத்தில் நின்ற திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வந்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
ஆண்டாள் ேகாவில்
முக்கிய வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் ராப்பத்து, பகல் பத்து, மார்கழி நீராட்ட உற்சவங்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந் தேதி பகல் பத்து உற்சவத்துடன் ெதாடங்கியது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் கோவிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக பெரிய பெருமாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், ஆண்டாள் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இதையடுத்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பெரிய பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வர பின்பு ஆண்டாள், ெரங்க மன்னார் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.
அப்போது, கோவிந்தா, கோபாலா, வைகுண்ட வாசா என பக்தர்கள் கோஷமிட்டனர். ஆண்டாள், ெரங்க மன்னார், பெரிய பெருமாள் ராப்பத்து மண்டபத்திற்கு வருகை தந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதியம் 1 மணி வரை சொர்க்கவாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.