< Back
மாநில செய்திகள்
தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்...!
மாநில செய்திகள்

தங்கப்பல்லக்கில் அழகர் மலைக்கு சென்றடைந்தார் கள்ளழகர்...!

தினத்தந்தி
|
9 May 2023 11:52 AM IST

சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், தங்கப்பல்லக்கில் அழகர்மலைக்கு சென்றடைந்தார்.

மதுரை

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் அழகர், மதுரைக்கு புறப்பட்டார். 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் பக்தர்கள் எதிர்சேவை அளித்து வரவேற்றனர்.

கடந்த 5-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மறுநாள் தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்வும் நடைபெற்றன.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளிய கள்ளழகரை, கோவிந்தா கோவிந்தா... எனும் கோஷம் முழங்கிட பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் விடைபெற்று, அழகர் மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர் தூவியும், கண்ணீர் மல்க, மனமுருகி வணங்கி அவரை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து, தீர்தவாரி நிகழ்வுகள் நிறைவடைந்து, கள்ளழகர் தங்கப் பல்லக்கில் புதூர், மூன்று மாவடி, சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, வழியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் அழகர் மலைக்கு சென்றடைந்தார்.

அழகர் கோவிலுக்கு வந்தடைந்த கள்ளழகருக்கு 21 திருஷ்டி பூசணிக்காய் உடைக்கப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டது. கள்ளழகருக்கு அழகர் கோட்டை வாசல் முதல் கோவில் வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்பு அளித்து தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து நாளை, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.




மேலும் செய்திகள்