அரியலூர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா கொடியேற்றம்
|கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பக்தரால் உருவாக்கப்பட்ட கோவில்
இறை நம்பிக்கை இயல்பானது. காலம் காலமாக இந்த கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவது எல்லோருக்கும் பிடித்தமானது என்றாலும், குறிப்பிட்ட ஒரு தெய்வத்துக்கு முக்கியத்துவம் தந்து வழிபடுவது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள், பலரும் வணங்கி வழிபடும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். அரியலூர் நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்லங்குறிச்சி கிராமம். இந்த ஊரில், ஒன்பது நிலை கோபுரத்துடன் கூடிய பரந்துவிரிந்த கோவிலில் இருந்து கலியுக வரதராஜ பெருமாள் அருள்புரிகிறார். இக்கோவில் திருமாலின் வரலாற்றுடன் தொடர்புடைய கோவிலோ, திருமாலின் நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றோ, பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலோ அல்ல. திருமாலின் சாதாரண பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த கோவிலில் மக்கள் பெருங்கூட்டமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
கொடியேற்றம்
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பெருந்திருவிழா ஸ்ரீநாமநவமி நாளான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவர் சன்னதி அருகே பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் ஆஞ்சநேயர் கொடி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமிகள் மடியில் கொடி வைக்கப்பட்டு ஊர்வலமாக கொடிக்கம்பத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. மாலை சூரிய வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நான்கு மாட வீதிகள் வழியாக சுவாமி திருவீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி தசாவதாரம் மண்டபத்தில் நடைபெறுகிறது.
10 நாட்களும்...
7-ந் தேதி காலை 5.40 மணி அளவில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய தேரிலும், ஆஞ்சநேயர் சிறிய தேரிலும் வைக்கப்பட்டு திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான்கு மாட வீதிகளில் திருத்தேர் பவனி வந்து நிலை நிற்கும். 8-ந் தேதி ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10 நாட்களும் இரவு சாமி திருவீதிஉலா, மேல நாடகம், கதாகாலட்சேபம், இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தார்கள் கமலா ராமச்சந்திர படையாட்சி, ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி ஆகியோர் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி இக்கோவிலுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.