< Back
மாநில செய்திகள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
7 April 2023 5:49 PM GMT

`தென்னகத்தின் சின்ன திருப்பதி'யான கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பெருந்திருவிழா

இறை நம்பிக்கை இயல்பானது. காலம் காலமாக இந்தக்கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவது எல்லோருக்கும் பிடித்தமானது என்றாலும், குறிப்பிட்ட ஒரு தெய்வத்துக்கு முக்கியத்துவம் தந்து வழிபடுவது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் `தென்னகத்தின் சின்ன திருப்பதி' என அழைக்கப்படும் அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலின் பெருந்திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கலியுக வரதராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெரியதேரிலும், ஆஞ்சநேயர் சிறிய தேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அரியலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காணிக்கை

இக்கோவிலில் பெருமளவில் விவசாயிகள் தங்களது கால்நடைகள் நலமுடன் இருக்கவும், விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக்கொண்டு உழவுத்தொழிலை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து நேற்று தேரோட்டத்தின்போது தங்களது வயலில் விளைந்த தானியங்களை வரதராஜ பெருமாளுக்கு காணிக்கையாக கொண்டு வந்து செலுத்துவதும், கால்நடைகளை வரதராஜ பெருமாளுக்கு காணிக்கையாக அளிப்பதும் நடந்தது. இதன் மூலம் தங்களது வேளாண்மையை பெருமாள் காத்து வருகிறார் என்பது இம்மக்களின் நம்பிக்கையாகும்.

மேலும் செய்திகள்