கலாஷேத்ரா விவகாரம்: மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டம்
|கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மாணவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை,
கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய 4 அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று விசாரணை நடத்தினர். கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி மாணவ, மாணவிகளிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.